;
Athirady Tamil News

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் விரைவில் அறிமுகம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

0

கிரிப்டோகரன்சிகள் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் பலரும் இதில் முதலீடு செய்துவருகின்றனர். அதேசமயம் இதை அணுக முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே இதனை தவிர்க்க அரசாங்கமே டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற சோதனை திட்டங்களை நாடு முழுக்க விரிவுபடுத்தும் போது, அதனுடைய சிறப்பம்சங்கள், நன்மைகள் குறித்து அவ்வப்போது எடுத்துரைக்கப்படும்.

தற்போது புழக்கத்தில் உள்ள பணத்திற்கு, இ-ரூபாய் கூடுதல் விருப்பத் தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் டிஜிட்டல் முறையில் இருப்பதால் பரிமாற்றத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் இருக்கும். மேலும், இது மற்ற டிஜிட்டல் பணத்தின் அனைத்து பரிவர்த்தனை நன்மைகளையும் கொண்டிருக்கும்.

நாணயக் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக டிஜிட்டல் கரன்சி இருக்கும். இதனை குடிமக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல தற்போது ரூபாய் நோட்டுக்களாக வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப் போல இந்த டிஜிட்டல் கரன்சியையும் வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல இதனை சேமித்து வைத்துக்கொள்வதற்கென தனியாக வங்கிக் கணக்குகள் தேவையில்லை. தற்போது புழக்கத்தில் இருக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏற்படும் செலவை இந்த டிஜிட்டல் கரன்சி குறைக்கும். சர்வதேச அளவில் காகித பயன்பாட்டை குறைத்து உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.