5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம்- டெல்லியில் புதிய நடைமுறை..!!
டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வருவதை தங்களது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆய்வு குழு ஒன்றை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியா விட்டால், மறுதேர்வு மூலம் இரண்டு மாதங்களுக்குள் அந்த மாணவனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.