கர்நாடகாவில் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை..!!
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோமீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த வாடகை ஆட்டோக்ளில் குறைந்தபட்சமாக ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. வாடகை கார்களை மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்களை வாடகையில் ஈடுபடுத்தியது குறித்து அந்த நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.