கேரளாவில் 9 பேரை பலி வாங்கிய விபத்து- சுற்றுலா பஸ்சை ஓட்டும் போதே டிரைவர் நடனம் ஆடும் வீடியோ வைரல்..!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். பேருந்து பாலக்காடு அருகே வடக்கஞ்சேரி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்துக்கு சுற்றுலா பேருந்தின் டிரைவர் ஜோமோனின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜோமோனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுற்றுலா பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் ஜோமோன் இதற்கு முன்பு மாணவ- மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது பேருந்து ஓட்டும்போதே எழுந்து நின்று நடனம் ஆடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவை இதற்கு முன்பு இதுபோல சுற்றுலா சென்ற மாணவர்கள் அவர்களின் செல்போனில் எடுத்து உள்ளனர். அதனை அவர்கள் இப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த விபத்து குறித்து கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் மாநில போக்குவரத்து கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்படி கேரள போக்குவரத்து துறை கமிஷனர் ஸ்ரீஜித் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இது தொடர்பாக நீதிபதி கூறும்போது, கேரளாவில் போக்குவரத்து விதிகளை யாரும் மதிப்பதில்லை. வடக்கஞ்சேரியில் நடந்தது போன்ற விபத்து இனியும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.