காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரிமோட் கண்ட்ரோல் தலைவராக இருப்பாரா? ராகுல் காந்தி பதில்..!!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ரிமோட் கண்ட்ரோலாக இருப்பார் என பாஜக விமர்சித்து வருகிறது. இதனிடையே, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை வந்தடைந்தார். தும்கூர் மாவட்டத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் தலைவர் காந்தி குடும்பத்தின் ரிமோட்-கண்ட்ரோலாக கட்டுப்படுத்தப்படுத்தப்படுவார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் முடிவுகளை எடுப்பதிலும், அமைப்பை நடத்துவதிலும் சுதந்திரமாக செயல்படுவார் என்றார். மேலும் அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்கியுள்ள மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய 2 தலைவர்களும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அவர்களுக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது. அவர்களுக்கு மக்களிடம் நன்மதிப்பு உள்ளது. 2 தலைவர்களும் மக்களை புரிந்துகொள்ளும் நபர்கள் ஆவர். 2 தலைவர்களில் யாரும் ரிமோட் கண்ட்ரோல்ட் காங்கிரஸ் தலைவராக செயல்படமாட்டார்கள். இன்னும் கூறவேண்டுமானால் ரிமோட் கண்ட்ரோலாக இருப்பார்கள் என கூறுவது அவர்கள் 2 பேரையும் அவமதிப்பதாகும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.