வில் அம்பு சின்னத்திற்கு தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு..!!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், சிவசேனா பெயர் மற்றும் அதன் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது. வில் அம்பு சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்நிலையில், வில் அம்பு சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் விதித்த தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.