திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள்..!!
திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நேற்று திருச்சானூரில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கோவில் வளாகம், புஷ்கரணி, அங்குள்ள உயர்நிலைப்பள்ளி வளாகம், மஞ்சள் மண்டபம், பூடி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்க உள்ளது.
அதற்காகக் கோவிலில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். விழாவின் கடைசி நாளான சக்கரஸ்நானத்தில் பங்கேற்க வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பூடி ரோடு, ரேணிகுண்டா ரோடு, மார்க்கெட் யார்டு ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம். இதேபோல் நவஜீவன் கண் மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி, கோசாலை வளாகம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுக்க ‘ஜெர்மன் ஷெட்’ அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் புனிதநீராட புஷ்கரணிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் உரிய வழிகள் அமைக்கப்படும்.
தமிழக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்பு உள்ளதால் தமிழில் வழிகாட்டி பெயர் பலகைகள் எழுதி வைக்கப்படும். திருமலையில் இருந்து திருச்சானூருக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரும் பாதையை முன்கூட்டியே பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்தப் பாதையில் போக்குவரத்து பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஊர்வலத்தின்போது யானைகள் மிரண்டு ஓடாமல் இருக்க, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கோசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆய்வின்போது தேவஸ்தான என்ஜினீயர் சத்தியநாராயணா, கோவில் துணை அதிகாரி லோகநாதம், என்ஜினீயர் மனோகரம், போக்குவரத்துப் பிரிவு மேலாளர் சேஷாரெட்டி கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில், உதவி பறக்கும் படை அதிகாரி சைலேந்திரா மற்றும் பலா் உடனிருந்தனர்.