கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு போட்டியாக பா.ஜ.க. தலைவர்கள் சுற்றுப்பயணம்..!!
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார்.
அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது.
இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று தொடங்குகிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.