நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களின் பெருமைகளை மீட்டெடுத்து வருகிறோம்- பிரதமர் மோடி பேச்சு..!!
குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உஜ்ஜயினி நகரில் 856 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மகா காளீஸ்வரர் கோயில் வளாக வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது ஹர ஹர மகாதேவ் என்ற கோஷமிட்ட பிரதமர், பின்னர் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த திட்டத்தின் மகத்துவம் வரும் தலைமுறையினருக்கு கலாச்சார மற்றும் ஆன்மீக உணர்வை கொடுக்கும். உஜ்ஜயினி நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் செழிப்பு, அறிவு, கண்ணியம் மற்றும் இலக்கியத்திற்கு வழிவகுத்தது. ‘நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் மூலம் காலனி ஆதிக்கத்தின் அடையாளங்களை நீக்கினோம். இன்று, இந்தியா முழுவதும் உள்ள கலாச்சார இடங்கள் அனைத்தும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.
நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களின் பெருமைகளை மீட்டெடுத்து வருகிறோம். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் கலாசார பெருமிதம். சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. பாபா கேதாரின் ஆசியுடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் புதிய வளர்ச்சி அத்தியாயங்கள் எழுதப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தர்மம் என்றால் கடமைகளை முடிப்பது. நமது கடமைகள் என்பது உலக சேவை மற்றும் மனித குல சேவைதான். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக உஜ்ஜயினி நகரில் உள்ள மகா காளீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பிரதமர் அங்கு பூஜை செய்து வழிபட்டார்.