கட்சியில் சேராததால் கங்குலியை அவமானப்படுத்துகிறது பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார். கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார். ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.