தமிழகம் முழுவதும் 3315 கி.மீ. பயணிக்கும் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி பூந்தமல்லி வந்தது..!!
தமிழ்நாட்டில் பொதுசுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பொது சுகாதார துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும்.
உலகளாவிய பொதுசுகாதார வல்லுநர்கள், முன்னோடிகள், ஆய்வு அறிஞர்கள் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்தம் திறன் நுட்பங்களை அனுபவங்களை பல்வேறு தலைப்புகளின்கீழ் நம்மோடு பகிர்ந்துகொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நூற்றாண்டு ஜோதி சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்து நூற்றாண்டு விழா நடக்க உள்ள மாமல்லபுரத்தை டிசம்பர் 5 அன்று வந்தடைய உள்ளது. இதில் முதலாவதாக பூந்தமல்லி சுகாதார மாவட்டத்திற்கு நூற்றாண்டு ஜோதி சென்னையிலிருந்து வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பொது சுகாதார நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் பொது சுகாதார நிறுவன துணை இயக்குநர் மருத்துவர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை தொடர்ந்து பொது சுகாதார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பொது சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொது சுகாதார நிறுவன நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார். இந்த நூற்றாண்டு ஜோதி 3315 கிலோ மீட்டர்கள் பயணித்து விழா நடக்கும் மாமல்லபுரத்தை டிச.5 அன்று அடைகிறது. பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தை தொடர்ந்து திருவள்ளூர் சுகாதார மாவட்டத்திற்கு இந்த நூற்றாண்டு ஜோதி செல்ல இருக்கிறது குறிப்பிடத்தக்கது.