கர்நாடகத்தில் செல்லா காசு ஆகும் 10 ரூபாய் நாணயம்..!!
10 ரூபாய் நாணயம்
இந்தியாவின் நிதி அமைச்சகம் சார்பில் ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத்தின் பெயரில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விடப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது. அதன்படி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதையடுத்து ரிசர்வ் வங்கி சார்பில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. நாட்டு மக்கள் அனைவரும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து இன்று வரை முழுமையாக விடுபடவில்லை.
இதற்கிடையே அரசு அச்சடித்து வெளியிடும் ரூ.10 நாணயத்தை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி, நாணயங்கள் பரிமாற்ற சிக்கல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலமான பதிலில், மத்திய அரசின் நிதித்துறை அனுமதியின் பேரில் வெளியிடப்படும் பல்வேறு வகையான ரூ.10 நாணயங்கள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் தான் பரிமாற்றப்படுகிறது. எனவே அந்த நாணயங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது ஆகும் என்றார்.
செல்லா காசு ஆகிவிட்டதா…
இருப்பினும் இன்றளவும் பல மாநிலங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் நிலவுகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட மாநகரங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், வாடகை கார்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள், காய்கறி கடைகளிலும் 10 ரூபாய் நாணயம் செல்லா காசு போல் மாறிவிட்டது. அந்த நாணயத்தை வாடிக்கையாளர்கள் கொடுத்தால் கடைக்காரர்கள் வாங்க மறுத்துவிடுகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயம் பலரது வீடுகளில் செல்லா காசாக டப்பாக்களில் அடைப்பட்டு கிடக்கின்றன.
முடங்கி கிடக்கும் நாணயம்
இதுதொடர்பாக நாம் சிலரிடம் கருத்துக்களை கேட்டோம்.
இதுபற்றி அவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:-
பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையம் அருகே வசித்து வரும் முரளி என்பவர் கூறுகையில், “என்னிடம் 10 ரூபாய் நாணயம் 50 உள்ளது. அதை எங்கேயும் மாற்ற முடியவில்லை. வங்கிக்கு எடுத்து சென்று கொடுத்தாலும் கூட யாரும் வாங்குவது இல்லை. அந்த 10 ரூபாய் நாணயங்களை யாராவது வாங்கினால் அதன்மூலம் எனக்கு ரூ.500 கிடைக்கும். தற்போது என்னிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறது. அந்த நாணயங்களை நான் எப்படி மாற்றுவது என்றே தெரியவில்லை” என்றார்.
பஸ்களில் வாங்க மறுப்பு
சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த குணா என்பவர் கூறும்போது, “10 ரூபாய் நாணயங்களை பஸ்களில் பயணம் செய்யும்போது கண்டக்டர்கள் கூட வாங்குவது இல்லை. கடைகளிலும் வாங்கி கொள்ள மறுக்கின்றனர். 10 ரூபாய் நாணயங்களை ஏன் வாங்க மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று கூறியும் கூட யாரும் வாங்குவது இல்லை. இதனால் அது செல்லா காசு போல் ஆகிவிட்டது. சிக்பேட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் வடமாநிலத்தினர் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் கடையில் நாம் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களுக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். வேறு வழியின்றி ஏதாவது பொருட்களை வாங்கி வர வேண்டி உள்ளது” என்றார்.
மக்களும் வாங்குவதில்லை
தட்சிண கன்னடா மங்களூரு அருகே கோடிக்கல் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் சசிகலா மகேஷ் கூறுகையில், “10 ரூபாய் நாணயங்களை நாங்களும் முதலில் வாங்கிக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் நாங்கள் கொடுத்தால் மக்கள் வாங்குவதில்லை. அதனால் நாங்கள் அந்த நாணயங்களை வாங்க மறுக்கிறோம். இதுபற்றி வங்கி அதிகாரிகள், அரசும் முறையான உத்தரவிட வேண்டும். மேலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
மங்களூரு நகரில் கொட்டாரசவுக்கி பகுதியில் சித்த மருத்துவர் அகிலா கூறுகையில், 10 ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் வாங்க மறுப்பதால், கடைக்காரர்களும் வாங்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும், கடைக்காரர்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க முன்வரவேண்டும் என்றார்.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் மஞ்சுநாத் என்பவர் கூறும்போது, “10 ரூபாய் நாணயங்களை நாங்கள் கொடுத்தால் மக்கள் வாங்கி கொள்வது இல்லை. இதனால் நாங்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்வது இல்லை. அவர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்கினால் அதை நாங்கள் எங்கு போய் மாற்றுவது. 10 ரூபாய் நாணய பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வங்கி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
மைசூரு டவுனில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் பிரேம்குமார் கூறியதாவது:-
10 ரூபாய் நாணயங்கள் செல்லா காசு என யாரும் கூறவில்லை. ஆனால் மக்கள் மத்தியிலும், கடைக்காரர்கள் மத்தியிலும் சரியான விழிப்புணர்வு இல்லாததால் அந்த நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். ஒரு சில வியாபாரிகள் சிலரிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்கிறார்கள். அதை மொத்தமாக வங்கிகளில் கொண்டு வந்து தருகிறார்கள். அதற்கு நாங்கள் ரூபாய் வழங்கி வருகிறோம். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், அதன் புழக்கம் ஏறக்குறைய முடங்கிப்போய் உள்ளது.
இதனால் எங்கள் வங்கியிலேயே லட்சக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்கள் இருப்பில் கிடக்கிறது. மூட்டை மூட்டையாக கட்டிவைத்துள்ளோம். 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருப்பவர்கள் எந்த வங்கி கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இதுபற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பொருளாதார சிக்கல் கூட ஏற்படலாம். எனவே 10 ரூபாய் நாணயங்கள் பற்றி மக்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கியும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுபோல் பஞ்சாப் நேசனல் வங்கி மேலாளர் குமாரசாமி என்பவர் கூறுகையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் அறிவிக்கவில்லை. ஆனால் ஏனோ 10 ரூபாய் நாணயங்களை மக்களும், கடைக்காரர்கள், பஸ் கண்டக்டர்களும் வாங்க மறுகிறார்கள். யாரோ சிலர் பரப்பிவிட்ட வதந்தியால் இன்றளவும் 10 ரூபாய் நாணயத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. இதனால் அதன் புழக்கம் குறைந்துபோய் வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன. இருப்பினும் எங்கள் வங்கியில் 10 ரூபாய் நாணயங்களை யார் கொடுத்தாலும் வாங்கி வருகிறோம் என்றார்.