தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவினம் வெளியீடு !!
கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் அடிப்படையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இந்த தகவல்களை பெற்றுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள், தாமரை கோபுரத்தின் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குரிய மொத்த செலவை உள்ளடக்கியுள்ளது.
அந்த தகவல்களுக்கமைய, 113,600,000 அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலோசனைக் கட்டணமாக 33 கோடியே 74 இலட்சத்து 85 ஆயிரத்து 20 ரூபாவும், கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணங்களுக்காக 22 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரத்து 357 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகிய செலவினங்கள் உள்ளடங்களாக இதர செலவுகளுக்காக மொத்தம் 34 கோடியே 42 இலட்சத்து 15 ஆயிரத்து 750 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிலத்திற்கான கட்டணமாக 2 பில்லியன் 250 மில்லியன் ரூபாவும் காப்பீட்டுக் கட்டணமாக 8,665,612 அமெரிக்க டொலரும் செலுத்தப்பட்டுள்ளது.