சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி அரசாங்கம் வரிகளை விதிக்கிறது? – தர்மலிங்கம் சித்தார்த்தன்!! (வீடியோ)
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி செயற்பட்டு அரசாங்கம் வரிகளை விதிக்கிறது. அல்லது அவர்களுடைய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தான் தற்போதைய வரிவிதிப்புக்கள் இடம்பெறுகின்றது போல உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வருமானவரி விதிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக, இன்றைய தினம் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் அரசாங்கம் ஒரு பிரத்தியேக வரத்தமானி மூலம், இந்த வரிவிலக்கு, அதாவது 3 இலட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்த வருமான வரியை ஒரு இலட்சமாக மாற்றி ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த காலங்களில் மூன்று இலட்சம் ரூபா வரையும் வரி கிடையாது. ஆனால் தற்போது வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலின்படி ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் என்றால் வரி அறவிடப்படும்.
இப்படியாக பார்க்கும் போது இவ்வாறு வரிவிதிப்பு நடுத்தர வர்க்க மக்களைத்தான் கூடுதலாக பாதிக்கும். ஏனென்றால் அவர்கள்தான் இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்தினை எடுப்பவர்களாக இருப்பார்கள். அரச உத்தியோகத்தர்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தான் இந்தப் பாதிப்பு ஆகக் கூடுதலாக ஏற்படவுள்ளது.
ஏற்கனவே அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே செல்கின்ற நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் மோசமான நிலையில் தான் வரப்போகின்றது என நான் கருதுகின்றேன்.
நிச்சயமாக வரிகள் கூட்டப்பட வேண்டும். ஆனால் அது யாருக்கு கூட்டப்பட வேண்டும் என்றால் ஆக மேல் மட்டங்களில் இருப்பவர்கள், இன்றும் வரி கட்டாது ஏய்த்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களிடமிருந்து வரியை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சாதாரண நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் மீதோ அல்லது மறைமுக வரிகளாக இந்த VAT (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) வரிகள் போன்றவற்றை உயர்த்துவதன் மூலமோ நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள்தான் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகப் போகின்றார்கள்.
இதை அரசாங்கம் சரியாக உணர்ந்து முன்னேற்றகரமாக சமூகத்தை கொண்டு செல்லக்கூடிய வகையிலான வரிகளை விதிக்க வேண்டும் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”