எரிபொருள் முறைகேடு குறித்து விசாரணை!!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்பக்கட்ட உண்மைகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் 200க்கும் அதிகமான நுகர்வோர் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய முறைகேடுகள் குறித்து நுகர்வோரால் அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாதிரிகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.