பிரியமாலிக்கு ரூ.8 கோடி கொடுத்த அசாத் சாலி !!
பாரிய பண மோசடி குற்றச்சாட்டு குறித்து கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எட்டரைக் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (17) முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பல ஆவணங்களுடன் வந்த அசாத் சாலி முறைப்பாடு செய்ததாகவும் இந்த முறைப்பாட்டுடன் பண மோசடி தொடர்பில் திலினிக்கு எதிராக 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையத்தின் 34ஆவது மாடியில் அலுவலகம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடுகளாகப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், சீ.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்ட திலினி பிரியமாலி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றை அவர் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது அலுவலகத்தை அண்டிய பல வர்த்தகர்களுடன் நட்பாக பழகி அதிக வருமானம் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் பணம் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.