திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த மாதம் 5-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் தரிசனம் செய்யும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக 3-ம் சனிக்கிழமை முதல் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் இலவச தரிசனத்திற்காக சுமார் 5 கி.மீ. வரை வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 4-ம் சனிக்கிழமை என்பதால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவு பெறும் நிலையில் பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் குறையாமல் அப்படியே உள்ளதால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், டீ, காபி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். நாளை ஐப்பசி மாதம் தொடங்குவதால் படிப்படியாக பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 84,794 பேர் தரிசனம் செய்தனர். 35,560 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.67 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.