விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி செய்யப்படும்- பிரதமர் மோடி..!!
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கவுரவ மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண் வள மையங்களையும், பிரதமரின் ஒரே நாடு ஒரே உரம் எனப்படும் தேசிய மக்கள் உரத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். தேசிய யூரியா பைகள் விற்பனையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் பிரதமரின் விவசாய வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் 12-வது தவணையான ரூ.16,000 கோடியை பிரதமர் விடுவித்தார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கவும், அவர்களின் திறனை அதிகரிக்கவும், விவசாய நுட்பங்களை ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு மேலும் ஒரு தவணையாக ரூ.16,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இந்தத் தவணை விவசாயிகளுக்குச் சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய மக்கள் உரத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி செய்யப்படும். 2014-ம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் சிரமங்களை எதிர் கொண்டனர். கள்ளச் சந்தை மூலம் யூரியா விற்பனை செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நாட்டின் 6 பெரிய யூரியா தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். நானோ யூரியா குறைந்த செலவில் அதிக உற்பத்தி செய்யும் ஒரு வழிமுறை. நானோ யூரியா உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறி வருகிறது. யூரியா ஒரு மூட்டைக்கு பதிலாக இப்போது ஒரு பாட்டில் நானோ யூரியாவை பயன்படுத்த முடியும். ஒரே நாடு ஒரே உரத் திட்டத்தின் கீழ் இனி நாடு முழுவதும் பாரத் என்ற பெயரில் மட்டுமே யூரியா கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை மந்திரிகள் ஷோபா கரந்த்லாஜே மற்றும் கைலாஷ் சவுத்ரி மற்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி பகவான் குபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.