இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!
குஜராத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிராசரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக் கைகளில் ஏற்கனவே இறங்கி விட்டன. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் சென்றுள்ளார்.
அவர் ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன்படி, இன்று காலை 9.45 மணிக்கு காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமான தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த புதிய விமான தளம் அமைக்கப்படுகிறது.
பின்னர், நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:- இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் முதல் ராணுவ கண்காட்சி இதுவாகும். வடக்கு குஜராத்தில் இருக்கும் தீசாவில் உள்ள புதிய விமானப்படை தளம் நாட்டின் பாதுகாப்பிற்கான சிறந்த மையமாக உருவாகும். இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்ய முடியாத மேலும் 101 பொருட்களின் பட்டியலை பாதுகாப்பு படைகள் வெளியிடும். இதன் மூலம் 411 பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உள்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இது இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.