;
Athirady Tamil News

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை: சட்டசபையில் மசோதா நிறைவேறியது..!!

0

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஆன்லைன் ரம்மி, போக்கர் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஆசிரியர்களிடம் ஆய்வு
சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில் மாணவர்களின் கல்வி மீதான கவனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மாணவர்களின் அறிவுத்திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத்திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மாணவர்கள் இடையே சுயமரியாதை குறைந்திருப்பதையும், அதிக கோபம் உள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் 77 சதவீத ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார சுரண்டல்
பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் இருந்து இ.மெயில் வந்ததில், 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக் கூடாது என்றும் அதை தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது. அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதையும், அதன் மூலம் உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும் தெரிகிறது.

சட்ட மசோதா தாக்கல்
குறிப்பாக இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.

நீதிபதி சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களையும் அரசு கவனமுடன் பரிசீலித்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம்
இந்த சட்ட மசோதாப்படி, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்களுக்கு பதிவு சான்றிதழை வழங்கும். விளையாட்டின் தன்மைப்படி அதை வரிசைப்படுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும்.

உத்தரவை ஆணையம் வழங்கும்
அவசர சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ஐ பயன்படுத்தவும் அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும். அதோடு விளையாட்டின் நேரம், அதில் செலுத்தப்படும் பணத்தின் அளவு, வயது கட்டுப்பாடு போன்றவற்றை ஆணையம் ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களுக்கு எந்தவொரு உத்தரவையும் ஆணையம் வழங்க முடியும்.

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை
சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போல (சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது) ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது. மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன.

எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

மேல்முறையீட்டு குழு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக்கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச்சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப்பதிவு ரத்து செய்யப்படும். இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களை கொண்டு அரசு அமைக்கும்.

அபராதத்துடன் சிறை தண்டனை
உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

விளம்பரம் செய்யக்கூடாது
இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.