நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணி!!
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் வீதித் திட்டங்கள் நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிர்மாணத் துறையை தொடர்ந்து செயற்படுத்தல் மற்றும் இத்துறையின் தொழில் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்த ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடி பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் முன்மொழிந்தார்.
நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறும் களப்பணியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.