;
Athirady Tamil News

மக்களுக்கு அஞ்சியே 22 வருகின்றது!!

0

மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதே தவிர, நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான மனநிலை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டை நாசமாக்கிய அரசாங்கம் இன்று நல்லவர்கள் போன்று கதைத்துக்கொண்டு 22ஆம் திருத்தத்தை கொண்டுவருவது வேடிக்கையானது என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை சிறப்பாக கட்டியெழுப்புவோம் என கூறி அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தவர்கள், அதன் பின்னர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தனர். இந்த சர்வாதிகார போக்கினை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இரங்கி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததன் விளைவாகவே இவர்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டுவருகின்றனர். ஆகவே மக்கள் போராட்டத்தின் விளைவாகவும், மக்களுக்கு அஞ்சியுமே 22ஆம் திருத்தும் கொண்டுவரப்படுகிறது என்றார்.

அரசாங்கத்தில் அடிமைகளாக இருந்துகொண்டு, ஏழு மூளைகள் இருப்பவரின் கதைகளை கேட்டுக்கொண்டு, இந்த நாட்டையே நாசமாக்கினர். இறுதியாக ஏழு மூளைகளைக் கொண்டவரையும் மக்களே விரட்டியடித்தனர். ஜனாதிபதியையும் மக்களே விரட்டியடித்தனர். இவற்றை மறந்துவிட்டு தூய்மையானவர் போன்று கதைக்க வேண்டாம். இந்த நாட்டை நாசமாக்கிய அரசாங்கம் இன்று நல்லவர்கள் போன்று கதைத்துக்கொண்டு 22ஆம் திருத்தத்தை கொண்டுவருவது வேடிக்கையானது என்றார்.

22ஆம் திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும் என கூறினாலும், சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துவோம் என கூறினாலும் அவை வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமேயாகும். உண்மையான நோக்கம் இருக்கும் என்றால் பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவற்றை முன்னெடுக்கவில்லை. தேசிய பேரவை என்பது இன்றும் ஒரு முடக்கப்பட்ட சபையாகவே உள்ளது. எனவே இவற்றுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எவ்வாறு இருப்பினும், எமது மூன்று கோரிக்கைகளுக்கு அமைய நாம் இதற்கு இணக்கம் தெரிவிக்க தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்படல், அரசியல் அமைப்பு பேரவையை பலப்படுத்தல், பாராளுமன்றம் இரண்டரை ஆண்டுகளில் கலைக்கப்பட வேண்டும், ஆகிய மூன்று கோரிக்கைகளுக்கும் இணங்கினால் மட்டுமே 22ஐ நாம் ஆதரிப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.