சீறிப் பாய்ந்த அக்னி பிரைம்… அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை..!!
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை ஒடிசா கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கிமீ முதல் 2,000 கிமீ வரை பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.