;
Athirady Tamil News

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- 4 பேர் பலி..!!

0

அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிக்கிங் கிராமத்தின் அருகே மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அத்துடன் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதிக்கோ அருகில் உள்ள கிராமத்திற்கோ வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதி இல்லை. அதனால் ராணுவம் மற்றும் விமானப்படையின் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களில் அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணிக்கு உதவினர். விபத்து நடந்த பகுதியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெறுகிறது. ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு தொடர்பாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.