நிலச்சரிவால் பெரிய பாறைகள் உருண்டு விழுந்தது- வீட்டிற்குள் இருந்த 4 பேர் பலி..!!
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தரலி பகுதியில் இன்று காலை 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில், சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 வயது சிறுமி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, பெரிய பாறைகள் உருண்டு இந்த வீடுகள் மீது விழுந்தன. இதன் காரணமாக இந்த வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்தன. இடிபாடுகளுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் புதையுண்டனர். தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டிற்குள் இருந்தவர்களை வெளியேற்றும் நேரத்தில், இடிபாடுக்குள் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தரலி துணை ஆட்சியர் ரவீந்திர சிங் ஜுவந்தா தெரிவித்தார். இந்த சம்பவத்தையடுத்து அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.