நோயாளிக்கு பழச்சாறு ஏற்றப்பட்ட விவகாரம்- போலி ரத்த தட்டணுக்கள் விற்ற 10 பேர் கைது..!!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் (தட்டணுக்கள்) குறைந்தது. இதையடுத்து அவரது உடலில் பிளேட்லெட்டுகள் ஏற்றப்பட்டது. அப்போது பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்த பிரதீப் பாண்டே வேறு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் கூறும்போது, “5 பிளேட்லெட்டுகள் அடங்கிய பைகளை நோயாளியின் உறவினர்கள் தனியார் மருத்துவ நிறுவனத்திடமிருந்து வாங்கி வந்தனர். இதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிளேட்லெட் அடங்கிய பைகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இந்த நிலையில் போலி ரத்த தட்டணுக்களை விற்றதாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சமீப நாட்களாக டெங்கு அதிகமாக பரவி வருவதால் பிளேட்லெட் தேவை அதிகரித்து வருகிறது. இதை கும்பல் ஒன்று சாதகமாக பயன்படுத்தி ஏழை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பிரயாக்ராஜில் நோயாளிகள் பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக பழச்சாறு உடலில் ஏற்றப்பட்டது தொடர்பாக கைதான கும்பலிடம் விசாரித்தோம். ஆனால் அப்படி செய்ய வில்லை என்று தெரிவித்துள்ளனர். பிரயாக்ராஜில் சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக ரத்த விநியோகம் செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு ஏற்றப்பட்ட பிளேட்லெட் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றனர்.