;
Athirady Tamil News

தீபாவளி பண்டிகை; சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம்; விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்..!!

0

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.தொழில், வியாபாரம், கல்வி என பல்வேறு தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையை சார்ந்து அவர்கள் இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதனை சுற்றி வசித்து வரும் வெளியூர்வாசிகள் பெரும்பாலானோர் பண்டிகைகளை தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.ரெயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், விமானங்கள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
வெளியூர்களுக்கு செல்வதற்கு ரெயில்கள்தான் பெரும்பாலானவர்களின் பிரதான மற்றும் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களில் செல்லும் நிலைக்கு அந்த பயணிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுதவிர வசதி படைத்தவர்கள் ஆகாய மார்க்கமாக அதாவது விமானம் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குடும்பம், குடும்பமாக கார்களிலும், ரெயில், பஸ்களில் கூட டிக்கெட் கிடைக்காதவர்கள் குழுவாக சேர்ந்து ‘கால் டாக்சி’களை வாடகைக்கு எடுத்துக்கொண்டும் சொந்த ஊருக்கு செல்வதை பார்க்க முடிகிறது. மோட்டார் சைக்கிள்களிலும் இளைஞர்கள் சிலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கழுகு பார்வையில் தீப்பெட்டி அடுக்கி வைத்தாற்போன்று வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது.

பயணிகளின் கூட்ட நெரிசல் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு வசதியாக, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து, கடந்த 21-ந்தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை யிலான 3 நாட்களில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு 4 ஆயிரத்து 218 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பிற நகரங்களுக்கு இடையே அந்த 3 நாட்களில் 6 ஆயிரத்து 370 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையை பொறுத்தமட்டில், கோயம்பேடு, மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி மாநகராட்சி பஸ் நிலையம், தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர போக்குவரத்துக்கழக பஸ் பணிமனை ஆகிய 7 இடங்களில் இருந்து விடியவிடிய பஸ்கள் புறப்பட்டன. அந்தந்த இடங்களில் பயணிகள் தங்களது உடைமைகளோடு காத்துக்கிடந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு காரில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும். ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் பொருட்படுத்துவது இல்லை. இதனால் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் இந்த ஆண்டும் துரத்தி வருகிறது. தாம்பரத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் இடையேயான 3 கி.மீ. தூரத்தை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகளுக்கு வழக்கமாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களால் கடந்த 2 தினங்களாக 30 முதல் 45 நிமிடம் வரையிலும் எடுத்துக் கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.

இதே நிலைதான் கோயம்பேடு, போரூர், வண்டலூர், ஊரப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவியது.தாம்பரம்-பெருங்களத்தூர் இடையே ஜி.எஸ்.டி. சாலையில் விரிவாக்க பணிகள் நடக்கிறது. ஏற்கனவே திக்குமுக்காடி நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விரிவாக்கப்பணி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைகிறது. தீபாவளியையொட்டி, நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதவிர ரெயில்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்களில் என ஒட்டு மொத்தமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் வெளியூர்களில் இருந்து மிகவும் குறைவானவர்களே சென்னைக்கு வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் என்பதால் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சொந்த கார்கள், ‘கால் டாக்சி’களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.