சித்தூர், விஜயவாடாவில் தீபாவளி பட்டாசு கடை தீ விபத்தில் 2 பேர் பலி..!!
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வட மாலாபேட்டை அருகே உள்ள நாராயணதாஸ் சோட்டா என்ற இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 கடைகளிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைகளில் பட்டாசு வாங்கிக் கொண்டு இருந்தனர். நேற்று இரவு கடையில் பட்டாசு வாங்கிய சிறுவன் ஒருவன் கடைக்கு முன்பாக பெரிய சரவெடியை கொளுத்தினார். சரவெடி வெடித்து சிதறி பட்டாசு கடைக்குள் விழுந்தது. அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசில் தீ பற்றி வெடித்ததால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு தீ பரவியது. இதனை கண்ட கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பக்கத்து கிடைக்கும் தீ பரவியது. 2 கடைகளிலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பட்டாசுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஒருவன் விளையாட்டாக கொளுத்திய பட்டாசு சிதறி ஒரு கோடி மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடா, காந்தி நகரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக 18 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. கடைகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் 3 கடைகளுக்கு தீ பரவியது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பட்டாசு கடையில் வேலை செய்த பிரம்மா (வயது 37) காசி (32) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 4 வாகனங்களில் சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.