இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகல்..!!
இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பரபரபான சூழ்நிலையில் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 142 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர். அதேவேளை, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உள்ளபோதும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் நிதி மந்திரியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.