கர்நாடகாவில் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்..!!
கர்நாடகாவில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசரச் சட்டத்தை வெளியிட கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது. எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சரவை அக்டோபர் 8ஆம் தேதி முறையான ஒப்புதலை வழங்கியது. இந்நிலையில் 20ஆம் தேதி நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பதால் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் உயர உள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் 9வது அட்டவணையின் கீழ் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டத்திற்கு அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின் மூலம், பட்டியலினத்தோர் இட ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் அதிகரிக்கும்.