பலத்த காயமடைந்து உதவி கேட்டு கதறிய சிறுமி… ஈவு இரக்கமின்றி பிசியாக வீடியோ எடுத்த மக்கள்..!!
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு பலர் திரண்டனர். ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, அந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுப்பதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பிசியாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுமி தனது ரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா? என ஒரு குரல் கேட்கிறது. இன்னொருவர் காவல்துறை தலைவரின் போன் நம்பரை கேட்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை போலீஸ்காரர் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படும்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.