;
Athirady Tamil News

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய் – மத்திய மந்திரி தகவல்..!!

0

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கடந்த 2-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் முக்கியமாக, கழிவுப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. அத்துடன் விதிமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றதாக கருதப்படுபவை நீக்கப்படுகின்றன.

இதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அந்தவகையில் 40 லட்சம் கோப்புகள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டு, தேவையற்றவை நீக்கப்பட்டதால் 37.19 லட்சம் சதுர அடி காலியாகி உள்ளது. குறிப்பாக 68,363 இடங்களில் நடந்த இந்த பணிகளில் 40.52 லட்சம் கோப்புகள் (மின்னணு கோப்புகள் உள்பட) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254.21 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது. மேலும் 588 விதிமுறைகள் எளிதாக்கப்பட்டு உள்ளன. இதைப்போல 3,20,152 மக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளன. இந்த தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் கடந்த 2-ந்தேதி முதல் 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கள அலுவலகங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 294 இடங்களில் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின்போது சுமார் 850 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 322 கோப்புகள் நீக்கப்பட்டன. கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இதுவரை ரூ.10 கோடியே 72 லட்சத்து 960 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த தூய்மைப்பணிக்கு பிறகு 75 ஆயிரத்து 145 சதுர அடி இடம் காலியாகி இருக்கிறது. இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.