புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? (கட்டுரை)
புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு – கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது.
இந்தப் புலம்பெயர் உதவி, என்றென்றைக்குமானது அல்ல! ஆனால், அதுகுறித்த உணர்வு சமூகத்தில் இருக்கின்றதா என்ற மிகப்பெரிய வினா தொக்கி நிற்கிறது. இன்றுவரை பேசாப்பொருளாய், இன்னும் சரியாகச் சொல்வதானால், பேசவிரும்பாத பொருளாய் இருக்கின்றது.
ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் தொடக்கங்கள் உயர்கல்வி, மேநிலையாக்கம் ஆகியவற்றையே மையமாகக் கொண்டிருந்தது. 1980களில் முனைப்படைந்த இனமுரண்பாடு, போராக மாற்றமடைந்ததைத் தொடர்ந்து, பலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும் அகதி அந்தஸ்ததைப் பெற்றுக்கொள்வதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர், பொருளாதார அகதிகளாவர்.
இன்று இந்த வெளிநாட்டுப் பணம், ஐந்து விதமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
முதலாவது, பொருளாதார வலுவை வழங்குவதன் மூலம், பலர் கற்பதற்கும் குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கும் நெருக்கடிகளின் போது தப்பிப் பிழைப்பதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இரண்டாவது, உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியையும் சமூக அசமத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது, வெளிநாட்டுப் பணத்தில் தங்கிவாழும் சமூகமொன்றையும் வெளிநாட்டுப் பணத்தின் மீதான தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நான்காவது, உழைப்பின் மதிப்பின் மீதான மரியாதை குறைந்துள்ளதோடு, வெளிநாட்டுக்குப் புலம்பெயருதலே ‘வளமான வாழ்வுக்கு வழி’ என்ற எண்ணப்பாங்கையும் உருவாக்கியுள்ளது.
ஐந்தாவது, பணத்தின் மதிப்புப் தெரியாமல், ஆடம்பரங்களுக்கும் அளவு கடந்த நுகர்வுப் பண்பாட்டுக்கும் வித்திட்டுள்ளது.
இந்த ஐந்து விளைவுகளும், தனித்தனியாக ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. ஆனால், இன்றைய காலச்சூழலில் இரண்டு முக்கியமான வினாக்களூடு, இந்தக் கட்டுரையை அணுக விரும்புகிறேன்.
முதலாவது, இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ‘வெளிநாட்டுப் பணத்தின்’ வருகை சாத்தியம்?
இரண்டாவது, அதிகரித்துள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இவ்வாறு அனுப்பப்படும் ‘வெளிநாட்டுப் பணத்தில்’ ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
கடந்த அரைநூற்றாண்டுகளாக இலங்கைக்கு பணம் அனுப்பியவர்கள், இன்னமும் அனுப்புபவர்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினர் ஆவர். இதை அவர்கள் ஒரு கடமையாகச் செய்தார்கள்; செய்கிறார்கள்.
இந்த உதவி பல்வகைப்பட்டதாக இருக்கிறது. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊருக்கு, நலிந்தோருக்கு என அது இன்றுவரை தொடர்கிறது. புலம்பெயர்ந்து வாழும் பலர், தங்கள் தேவைகளைக் குறைத்து, ஆசைகளை இறுத்து, இன்றுவரை இப்பொருளாதார உதவியைச் செய்கிறார்கள்.
இந்த முதலாம் தலைமுறையின் காலம், விரைவில் முடிவுக்கு வருகிறது. பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள்; நோயாளியாகி உள்ளார்கள்; இன்னும் பலர் விரைவில் ஓய்வு காலத்தை நெருங்குகிறார்கள். எனவே, இவர்களால் நீண்டகாலத்துக்குத் தாய்நாட்டுக்குப் பணம் அனுப்ப இயலாது.
இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் குறைவு. அவர்கள், தங்களது பெற்றோர்கள் செய்த பணியை ஒருபோதும் செய்யப் போவதில்லை. எனவே, இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணத்தின் அளவு, இன்னும் ஐந்து தொடக்கம் 10 ஆண்டுகளுக்குள் பாரிய சரிவைச் சந்திக்கும்.
2002ஆம் ஆண்டு, சமாதான காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்தவர்கள், இன்னமும் வலுவான உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அவர்களது சேமிப்பில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
2023ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக, மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களாலும் முன்னர் அனுப்பியளவு பணத்தை, இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அனுப்ப இயலுமா என்ற வினா இருக்கின்றது. இவ்விரண்டும், இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தில் தங்கிவாழும் மக்களுக்கான எச்சரிக்கைக் குறிகள் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
புலம்பெயர்ந்து போனவர்களை, ஒரு ‘பணம் காய்க்கும் மரம்’ போல பார்க்கும் பார்வை, காலங்காலமாக இருந்து வருகிறது. “நீங்கள் போய்த் தப்பிவிட்டீர்கள்; நாங்கள் கஷ்டப்படுகிறோம்” என்ற வகையிலான சொல்லாடல்கள் மூலம், புலம்பெயர்ந்தோரைக் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தும் செயல்கள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கின்றன.
இவ்விடத்தில், கவிஞர் சி. சிவசேகரம் எழுதிய ‘பணங்காய்ச்சி மரம்’ என்ற கவிதையை இங்கு தருவது இந்தக் கட்டுரை குறித்த புரிதலை வளப்படுத்தும்.
பணங்காய்ச்சி மரமேறிக் காய்பிடுங்கவும் மரத்தை
உலுப்பிக் காய் பொறுக்கவும் பணங்காய்ச்சி மரமிருக்கும்
இடந்தேடி அவர்கள் எல்லோரும் தான் போனார்கள்
ஆண்களும் போனார்கள், பெண்களும் போனார்கள்.
வலியவர்களும் மெலியவர்களும் போனார்கள்.
கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும்
அல்லாதவர்களும் உள்ளவர்களும் இல்லாதவர்களுமாக
அவர்கள் எல்லோரும் போனார்கள். பணங்காய்ச்சிமரம்
டொலர், டொயிஷ்மார்க், யென், பவுண் என
வண்ண வணமாய்க் காய்த்துத்தள்ளியது. பணங்காய்ச்சி
மரத்தைநாடிக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப்
போனார்கள். பட்டணத்திலிருந்து பெருநகரத்துக்கும்
நாட்டைவிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும்
வண்டில்களேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலுங்
காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில்
அமர்ந்தும் வாகனங்களின் அடியிற் பதுங்கிக்கிடந்தும்
போனார்கள். மின்சாரவேலிகளைத் தாண்டிக் குதித்தும்
பாதாளச் சாக்கடை வழியே குனிந்தும் போனார்கள்.
எப்படியெப்படிப் போகலாமோ
அப்படியப்படியெல்லாம் பணங்காய்ச்சி மரத்தின்
திசை நோக்கி அவர்கள் எல்லாரும் போனார்கள்.
ஊரைவிட்டும் உறவைவிட்டும் போவதை எண்ணி
அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக்கொண்டு
போனார்கள். சஞ்சலத்துடன் போனார்கள்.
சந்தேகங்களுன், நிச்சயத்துடன், நம்பிக்கைகளுடன்
போனார்கள். போன எல்லோருமே
எதிர்பார்ப்புகளுடன் தான் போனார்கள். பணங்காய்ச்சி
மரத்துக்குப் பூசைகள், தோத்திரங்கள், பணிவிடைகள்
எல்லாமே செய்தார்கள். பணங்காய்ச்சி மரம் கொஞ்சம்
உண்ணவும் உடுக்கவும் கொடுத்தது. தங்குவதற்கு நிழலுங்
கொடுத்தது. விளையாடவும் பொழுதைப்போக்கவும்
வழிகளைக்கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த
காய்களை விலையாக வாங்கிக்கொண்டது. அவர்களது
சுதந்திரத்தைக் களவாடிக்கொண்டது. பணங்காய்ச்சி
மரத்துக்குச் சொந்த மண்ணென்று எதுவுமில்லை என்றும்
அதன் வேர்கள் உலகெங்கும் பரவி எல்லா மண்களதும்
வளங்களை உறுஞ்சிக்கொள்கிறது என்றும்
அறியமாட்டாதவர்கள் அறிந்து சொன்னவர்மீது
எரிந்து சினந்தார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப்
பணிவிடை செய்வதே தங்களது பிறவிப்பயன் என்று
உரத்துக் கூறினார்கள். பணங்காய்ச்சி மரத்தை நோக்கிய
தங்களது பயணம் வீண்போகவில்லை என்று
மெய்யாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப்
போகிறவர்களை எல்லோரும்தான் வரவேற்கிறார்கள்.
எல்லோருந்தான் வழிமறிக்கிறார்கள்.
இந்தக் கவிதை புலம்பெயர் வாழ்வின் இன்னொரு பக்கத்தைச் சொல்கிறது. ஆனால், இந்தப் பக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு புலம்பெயர்ந்தோரும் தயாரில்லை; விளங்கிக் கொள்வதற்கு ஊரில் உள்ளோரும் தயாரில்லை.
இனிவரும் காலத்தில், இந்த வெளிநாட்டுப் பணத்தின் வருகையில் கணிசமானளவு குறைவு ஏற்படப்போவது உறுதி. இந்தப் பணம் வடபகுதியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ‘நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குமாங்கே பொசிவது போல்’, இந்தப் பணம் ஏற்படுத்தியுள்ள நுகர்வும் புதிய சாத்தியங்களும் பலருக்கு வேலைவாய்ப்புகளை, வருமானத்தை வழங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தப் பின்புலத்தில், இந்த வெளிநாட்டுப் பணம் தொடர்ச்சியாக வராதுவிடின் அதை நம்பியிருப்போரின் எதிர்காலம் என்ன? உள்ளூர் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் என்ன? சமூகரீதியாக இது ஏற்படுத்தப்போகும் நெருக்கடிகள் என்ன போன்றன குறித்து, ஆழமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
பெருந்தொற்றும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் சுயபொருளாதார முயலுகைகளின் தேவையை முன்னெப்போதையும் விட, வலுவாக எடுத்துக் காட்டியுள்ளன. ஆனால், இப்போதும் ‘பொருளாதார நெருக்கடி தென்பகுதிக்குத்தான், வடபுலத்திற்கல்ல’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி, உலகளாவியதாக உருமாறுகிறது. இது இன்னொரு நெருக்கடியை நோக்கி உந்தித் தள்ளுகிறது. எனவே, எமக்கான பொருளாதார மாதிரிகள், தப்பிப்பிழைப்பதற்கான வழிகள், நீண்டகாலத் திட்டங்கள் குறித்து சிந்தித்தாக வேண்டும். அதற்கான தொடக்கம் நாட்டுக்குள் வருகின்ற வெளிநாட்டுப் பணத்துக்கு ஒரு காலாவதித் திகதி உண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதே!
எமது பொருளாதார இயங்கியலின் தன்மை மாறியாக வேண்டும். தொடர்ந்தும் ஒரு தங்குநிலைப் பொருளாதாரமாகக் காலம் தள்ளவியலாது. அவ்வாறு காலம் தள்ள நினைத்தால், அது உயிர்ப்பான செயலூக்கமாக இருக்காது. அது, நீண்டகாலத்துக்கு தலைமுறைகள் தாண்டிப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தத் தங்குநிலை பொருளாதாரத்துக்கான முடிவுக்கான முன்னுரையை எழுத, நாமெல்லோரும் தயாராக இருக்கிறோமா?