உமாச்சந்திரா பிரகாஷ் கைது!!
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், இன்று கைது செய்யப்பட்டு, 2 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டாய ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அப்போது கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அந்த சந்தர்ப்பத்தில் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள் மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்து, நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கரையோர பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பலவந்தமாக காயங்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் உமாச்சந்திரா பிரகாஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உமாச்சந்திரா பிரகாஷை, இன்றைய தினம் (ஒக்.28) கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, பொலிஸார் நேற்றைய தினம் (ஒக்.27) அறிவித்தல் கொடுத்திருந்தனர்.
பொலிஸாரின் அழைப்புக்கு அமைய, நீதிமன்றில் இன்றைய தினம் (ஒக்.28) உமாச்சந்திரா பிரகாஷ் முன்னிலையாகியிருந்தார்.
இந்த நிலையில், கரையோர பொலிஸாரினால் உமாச்சந்திரா பிரகாஷ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.