;
Athirady Tamil News

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி..!!

0

குஜராத்தில் நடைபெற்ற ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கச்சா உருக்கு உற்பத்தி திறனை இருமடங்காக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த உருக்காலை விரிவாக்கம் மூலம் ரூ.60,000 கோடிக்கும் அதிகமான முதலீடு கிடைத்துள்ளது. இதற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.

மேக்-இன்- இந்தியா தொலை நோக்கிற்கு இந்த உருக்காலை திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இது குஜராத் மற்றும் நாட்டின் பிற பகுதி இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், கட்டுமானம், வாகனத் தொழில், மூலதனப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி ஆகியவற்றில் உருக்குத்துறை பெரும் பங்களிப்பை வழங்குகிறது. வலுவான உருக்குத்துறை உள்கட்டமைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஹசீரா ஆலை விரிவாக்க ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சார வாகனம் மற்றும் இதர உற்பத்தி துறையில் இது மிகப்பெருமளவில் உதவிகரமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.