புத்தூரில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பம்!! (படங்கள்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட புத்தூர் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் அமைப்பும் தேசியகலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இன்று வெள்ளிக்கிழமை (04.11.2022) காலை-9.30 மணிக்கு யாழ்.புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாக் கல்லூரியில் ஆரம்பமானது.
வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியைச் சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய கண்காட்சி ஆரம்ப நாளில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பல்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த கண்காட்சியில் சிறுவர்களுக்கான நூல்கள், பாடசாலை மாணவர்களுக்கான பயன்தரு நூல்கள் உட்படப் பல்துறை சார்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல நூற்றுக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் கொள்வனவு செய்யப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 வீத விலைக் கழிவும் வழங்கப்படுகிறது.
இதேவேளை, இன்று ஆரம்பமான மேற்படி புத்தகக் கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(06.11.2022) வரை காலை-9 மணி முதல் பிற்பகல்-5 மணி வரை இடம்பெறும் எனக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”