;
Athirady Tamil News

மாணவ சமூகத்தை போதைப் பாவனையிலிருந்து மீட்க அனைத்து துறையினரும் ஒன்றிணைய வேண்டும்! வட மாகாண ஊடக அமையும் வேண்டுகோள்.!!

0

வட மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாக பரவி வரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டுமென, வட மாகாண ஊடக அமையம் வேண்டுகோள் விடுக்கின்றது.

மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தமிழர் பகுதிகளில் மாணவச் சமூகத்திடம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப் பாவனையால் மாணவர் சமூகம் கல்வி கற்கும் நிலையில் பல்வேறு தாக்கங்களையும் கலாச்சார சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. இது எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தை நோயாளிகளாக மாற்றுவதோடு பல்வேறு குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்க காரணமாக இருக்கும்.
அத்துடன் ஆண் பெண் என்ற பேதமின்றி போதை என்ற அரக்கன் இளம் சமூகத்தின் சிந்தனை ஆற்றலை அழித்து கல்வி செயற்பாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தும்.

போதைப் பொருள் மாத்திரைகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் ஒரு சில மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதானது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் மன உழைச்சல்களையும் வேதனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரை காக்கும் புனிதமான வைத்திய தொழில் செய்யும் வைத்தியர்களில் ஒரு சிலர் இளம் சந்ததியினரை குறிவைத்து போதைப் பொருள் மாத்திரைகளை வினியோகிப்பது.
பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கல்விச் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைக்குத் துணைபுரியும் சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வட மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் வட மாகாண ஆளுநரினால் ஒவ்வொரு மாவட்டங்களும் கண்காணிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வட மாகாண ஊடக அமையம் முன்வைக்கிறது.

மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமை ஆவதால், பெற்றோர்களின் இயல்பு நிலைமைகள் செயலிழந்து வருவதுடன் பொலிசாரிடம் தங்கள் பிள்ளைகளை கையளிக்கும் அவலங்களும் நடைபெறுகின்றது. போதைப் பாவனையைத் தடுத்து நிறுத்துவதற்கு வடமாகாணத்தில் பணிபுரியும் அரச அதிகாரிகள் தமது கடமைக்கு மேலதிகமாக பணியாற்ற முன்வர வேண்டும். அத்துடன் பாதுகாப்புத் தரப்பினர் தமது மூலோபாய தந்திர நடவடிக்கைகளை வகுத்து போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொள்ளும் நபர்கள் விநியோகஸ்தர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் மற்றும் தொழில் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், ஆன்மீகவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டு அமைப்புக்களை ஒன்றிணைத்து வடபகுதியில் மாணவ சமுகத்தில் பரவி வரும் போதைப் பொருள் பாவனையை முற்றாக அழித்தொழிக்க ஒருங்கிணைந்த வேலைத்திட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஊடக அமையம் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைப்புக்களிடம் வேண்டு கோள் விடுக்கிறது.
என்று மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.