விசாகப்பட்டினத்தில் நாளை பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ செல்கிறார்..!!
பிரதமர் மோடி நாளை மாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். விமான நிலையம் அருகே உள்ள மாருதி சந்திப்பில் இருந்து விசாகப்பட்டினம் கடல் படை கப்பல் தளம் வரை மோடி சாலையில் சென்று பொது மக்களை சந்திக்கிறார். இந்த ரோடு ஷோவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மோடி செல்லும் பகுதி முழுவதும் மத்திய போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 12-ந் தேதி ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய மந்திரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தின் மூலம் பாஜக ஆந்திர மாநிலத்தில் தனது செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. தனி சக்தியாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றி வருகிறது. இதற்காக மத்திய மந்திரி முரளிதரனை விசாகப்பட்டினத்தின் முக்கிய பொறுப்பாளராக பா.ஜ.க. நியமித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகை ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என அந்த மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனா சேனா கட்சி கலந்து கொள்ளுமா இல்லையா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது ஒரு புறம் இருக்க தெலுங்கு தேசம் கட்சியினர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இந்த புதிய திட்டங்கள் மூலம் தனது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள ஆளுங்கட்சியும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை கூட்ட ஏற்பாடு செய்துள்ளனர். பிரதமர் மோடி வருகை ஆந்திர மாநில அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.