வேளாண் கழிவுகளை எரிப்பதால் அதிகரிக்கும் காற்று மாசு: விரிவான அறிக்கை சமர்ப்பிக்க பஞ்சாப் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!!
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நேற்றுபஞ்சாப் தலைமைச் செயலாளர் விஜய் குமார் ஜான்ஜுவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆணையம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது. இத்தகைய சம்பவங்களால் பல நகரங்களில் காற்றின் தரம் ‘கடுமையாக பாதிக்கப்பட்டு’ மக்களின் ஆரோக்கியத்தை பாதித்து வருகிறது என்று ஆணையம் தெரிவித்தது. மேலும், வேளாண் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். நிலைமை சீரடையவில்லை என்றால், பஞ்சாப் அரசு மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. அத்துடன் பஞ்சாபில் வேளாண் கழிவுகளை எரிப்பது குறித்து எடுகப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சம்ர்ப்பிக்க பஞ்சாப் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.