இந்திய கடற்படை சார்பில் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த கூட்டு பயிற்சி இன்றும், நாளையும் நடக்கிறது..!!
இந்திய கடற்படை சார்பில் மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு படை அதிகாரி கேப்டன் சுனில் மேனன் கூறியதாவது:-
இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பில் கடலோர பாதுகாப்பு தொடர்பான கூட்டு பயிற்சி மும்பையில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் பங்கேற்கின்றன. கடலோர காவல் படை மட்டுமின்றி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகாவை சேர்ந்த போலீசார் மற்றும் சுங்கத்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, மீன்வளத்துறை, துறைமுக அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
பயிற்சிகளில் கலந்து கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, தடையற்ற தகவல் தொடர்பு, உளவு துறை தகவல்களை பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பயிற்சியின்போது மதிப்பிடப்படும். மேலும் கடல் வழியாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு அமைப்புகளின் திறன் சோதிக்கப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் விரிவான பகுப்பாய்வு செய்து கடலோர பாதுகாப்பு எந்திரத்தை மேலும் வலுப்படுத்தி குறைபாடுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.