பாடசாலை மாணவனின் புத்தகப் பையில் போதைப்பொருள்: வடக்கில் தொடரும் சீரழிவுகள்!!
நாட்டில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக போதைப்பொருள் பாவனை தற்போது பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவன் ஒருவனது பாடசாலை புத்தகப்பையில் இருந்து கஞ்சா கலந்த மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து பிரதேச நன்னடத்தை அபிவிருத்திக்குழு மற்றும் பொலிஸார் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போதே மாணவன் ஒருவனிடமிருந்து கஞ்சா கலந்த மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ளது.
இதனைவிட மேலும் மூன்று மாணவர்களிடமிருந்து புகையிலை மற்றும் சுண்ணாம்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பாக்கினை வைத்திருந்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தென்னிலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த பாடசாலை மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”