‘பழங்குடியினருக்கு ஆதரவான சட்டங்களை பலவீனப்படுத்துகிறது’ – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இந்த யாத்திரையை அவர் கன்னியாகுமரியில் தொடங்கினார். பின்னர் கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா என தென் மாநிலங்களில் பாதயாத்திரை நடத்தினார். தற்போது அவர் மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
பழங்குடியினர் மத்தியில் பேச்சு
அங்கு அவர் ஜல்கான் ஜமோத் என்ற இடத்தில் பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பழங்குடியினர்தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று என் பாட்டி இந்திரா காந்தி சொல்வார். மற்ற குடிமக்களைப் போன்று அவர்களுக்கும் அதிகாரம் உள்ளளது. பழங்குடியினர் நலனுக்காக, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது.
வனவாசிகள் என அழைக்கிறார்
பிரதமர் மோடி பழங்குடியினரை வனவாசிகள் என்று அழைக்கிறார். ஆதிவாசி என்ற வார்த்தைக்கும், வனவாசி என்ற வார்த்தைக்கும் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. வனவாசி என்றால் நீங்கள் காட்டில்தான் வாழ முடியும். நகரங்களில் வாழ முடியாது. நீங்கள் டாக்டராகவோ, என்ஜினீயராகவோ முடியாது. விமானத்தில் பறக்க முடியாது. பிரதமர் மோடி பழங்குடியினர் நிலங்களை எடுத்து, தொழில் அதிபர்களாக உள்ள தனது நண்பர்களுக்கு தாரை வார்க்க விரும்புகிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…
நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம். உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம். நீங்கள் பழங்குடி மக்களின் கலாசாரத்தையும், வரலாற்றையும் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் இந்த நாட்டை புரிந்து கொள்ள முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.