ஒரு வாரத்தில் 3 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏற பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் உடனுக்குடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்து ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சனி, ஞாயிறு தினங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி தேவஸ்தான மந்திரி மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து வருவதால் அவர்கள் நிலக்கல் பகுதியில் ஓய்வெடுத்து செல்வது நல்லது என கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் ஓய்வெடுத்து மலை ஏறுவது நல்லது. அதனை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.