;
Athirady Tamil News

வடக்கைச் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டுவேன்- வடக்கு ஆளுநர்!!

0

“வடக்கு மாகாணத்தில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாக வருகின்றன. இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்.” என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடக்கில் பூதாகரமாக மாறியுள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாம் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளோம். இது மிகவும் துக்கமான விடயம். இங்கு சில ஆட்கள் – சில இளைஞர்கள் போதைப்பொருளை ஊசி மூலமும் உடலில் செலுத்துகின்றார்கள். தேசியக்காய் பானத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்துகின்றார்கள். இது மிகவும் மோசமான செயல்.

வடக்கில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாக வடக்குக்கு வருகின்றன. இது மிகவும் பெரிய பிரச்சினை. நான் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு போதைப்பொருள் பிரச்சினையால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைப்பட்டுள்ள இளைஞர்களைக் கண்டேன். அது ஓர் துக்கமான கதை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை வடக்குக்கு யார் போதைப்பொருள் கொண்டு வருகின்றார்கள், யார் விற்பனை செய்கின்றார்கள் என்பது தெரியக்கூடிய ஆட்களுக்குத் தெரியும். அது தெரிந்தால் அடுத்த கேள்வி அதைத் தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதே. இப்போதைக்கு நாங்கள் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றோம். போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் கைதான பாவனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் விற்பனையிலும் பிரச்சினை இருக்கின்றது. பணப் புழக்கம் அதைக் காட்டிக் கொடுக்கின்றது. அதனூடாகப் பலர் சிக்குவார்கள். எனவே, இந்த நடவடிக்கையை நாம் கைவிடமாட்டோம். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குப் பின்னால் செல்வோம். அவர்களையும் கைது செய்வோம்.

வடக்கில் போதைப்பொருள் பிரச்சினையை இலகுவாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை இங்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. போதைப்பொருள் பிரச்சினை முழு இலங்கையிலும் இருக்கின்றது. நான் முதல் சொன்ன மாதிரி ஒரு போதைப்பொருள்தான் கடல் வழியாக வடக்குக்கு வருகின்றது. ஏனையவை இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வடக்குக்கு வருகின்றன. வடக்கில் ஒவ்வொரு நாளும் சராசரி 500 படகுகள் கடலுக்குப் போய் வந்தால் அவற்றில் குறைந்தது ஒன்றில் அல்லது இரண்டில் குறித்த போதைப்பொருள் வடக்குக்கு வருகின்றது.

இந்த நுட்பமான வலையமைப்பை இலகுவில் நிறுத்த முடியாது. இது மிகவும் பெரிய பிரச்சினை. எனினும், இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.