;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை 10 நாட்கள் கொண்டாட முடிவு..!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் செய்யப்படும். வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும்.

அதற்காக, திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதி வி.ஐ.பி. பக்தா்களுக்கு (செல்ப் புரோட்டோகால்) மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர் ஜனவரி மாதம் 1-ந்தேதி தொடங்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் கொடுத்துத் தீரும் வரை திறந்திருக்கும். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்லலாம்.

ஆனால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வைகுண்ட துவார தரிசனத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனந்த நிலையம் (மூலவர் கருவறை) தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளது. 1957, 1958-ம் ஆண்டுகளில் தங்க முலாம் பூசும் பணி நடந்தது. அதேபோல் அடுத்த ஆண்டு தங்க முலாம் பூசும் பணி தொடங்க உள்ளது. பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தங்கம் காணிக்கை வழங்கியதையும், பிரதான உண்டியலில் தங்கம் காணிக்கையாகப் போட்டதையும் வைத்து ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் 1,100-க்கும் மேற்பட்ட கோவில்களை விரைவாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி-திருமலை 2-வது மலைப்பாதையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திருமலையில் உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜி நகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பதி தாதய்யகுண்டா கங்கையம்மன் கோவில் வளர்ச்சிக்கு ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறைகளை நவீனப்படுத்தும் பணிகளுக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக ஆண்கள் விடுதி கட்ட ரூ.3.35 கோடி ஒதுக்கப்படும். நந்தகம் விடுதியில் தளவாடங்கள் வாங்க ரூ.2.95 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்க ரூ.2.56 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் திருத்தப்படாததால், ஒப்பந்தத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பிற வகைகளின் ஊதிய விகிதங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும்.

இந்தக் குழு அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கமான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 850-ம் பிரம்மோற்சவ விழா பரிசு வழங்கப்படும். லட்டு கவுண்ட்டர்களில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் லட்டுகளை கூடுதல் விலைக்கு பக்தர்களிடம் விற்பனை செய்கிறார்கள். இதுதொடர்பாக பக்தர்களிடம் இருந்து பறக்கும் படை துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே லட்டு கவுண்ட்டர்களில் லட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.