சோலாப்பூரில் நடந்த வினோத கல்யாணம்- இரட்டை சகோதரிகளை மணந்த மணமகன் மீது வழக்கு பதிவு..!!
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் 36 வயதான இரட்டை சகோதரிகளை மணமகன் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களான இரட்டை சகோதரிகளின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இருவரும் தாயுடனே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மணமக்கள் மற்றும் மணமகன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த வினோத திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை மல்ஷிராஸ் தாலுகாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494வின் கீழ் அக்லுஜ் காவல் நிலையத்தில் மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவரோ அல்லது மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணமகன் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.