பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்!!
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தியாக 5.3 மில்லியன் இலங்கை மக்கள் ஏற்கெனவே உணவைத் தவிர்த்துக் கொண்டிருந்தாலும், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் காலநிலையால் தூண்டப்பட்ட இயற்கை ஆபத்துகள் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்துடன் கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டின், குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை பற்றிய சமீபத்திய யுனிசெஃப் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், 2.9 மில்லியன் குழந்தைகள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் பணவீக்கம், வருமான பாதுகாப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால், குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஐந்தில் இரண்டு குடும்பங்கள் (41.8 சதவீதம்) தங்கள் சம்பளத்தில் 75 சதவீதத்துக்கும் மேலாக உணவை வாங்குவதற்குச் செலவிடுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரம் மற்றும் கல்விக்காகச் செலவிடவில்லை என்றும் பல குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பு தீர்ந்துள்ள நிலையில், போராடி வருகின்றன.
2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்ததுடன், அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் உள் மற்றும் வெளி தொழிலாளர் இடம்பெயர்வு போன்ற காரணங்களால் குழந்தைகள் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்கின்றனர்.