இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை..!!
நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளின் புள்ளி விவர பட்டியலும் இணைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆயிரத்து 552 பேர் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் 6 ஆயிரத்து 95 பேர் தற்கொலை செய்துள்ளனர். தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 171 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இந்த தற்கொலைகளுக்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவும் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை அறிக்கையில் கூறப்படவில்லை எனவும் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.