பாதயாத்திரைக்கு அனுமதி கேட்டு ஷர்மிளா உண்ணாவிரதம்- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி பாதயாத்திரை நடத்தி வந்தார். பாதயாத்திரையின்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர ராவ் கட்சியினர் கடந்த வாரம் ஷர்மிளா மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ஷர்மிளாவின் பிரசார வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஷர்மிளாவும் கைது செய்யப்பட்டு போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரது காரை கிரேனில் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஷர்மிளாவின் பாதயாத்திரைக்கு தெலுங்கானா போலீசார் தடை விதித்தனர். பாதயாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஷர்மிளா ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐதராபாத் ஐகோர்ட் ஷர்மிளாவின் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இருப்பினும் தெலுங்கானா போலீசார் ஷர்மிளா பாதயாத்திரையின்போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருவதால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தனர். பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஷர்மிளா தனது தாயார் விஜயலட்சுமியுடன் வீட்டின் முன்பாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஷர்மிளாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஷர்மிளா தெரிவித்தார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி போலீசார் அவரை இன்று கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.