கட்டுக்கடங்காத கூட்டம் எதிரொலி: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த வருடம் கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக கடந்த 9-ந் தேதி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் சபரிமலையில் குவிந்தனர். இதனால் மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 67 ஆயிரம் பேர் தரிசனத்துக்காக முன்பதிவு செய்திருந்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் திரண்டனர். இதனால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என பலர் மூச்சு திணறலுக்கு ஆளானார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு ஆசுவாசப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சபரிமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு நேற்று அவசரமாக கூடியது. சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியது. அப்போது தரிசன நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது. அதற்கு பதில் அளித்த திருவிதாங்கூர் தேவஸ்தானம், தரிசன நேரம் தொடர்பாக தந்திரியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் நிலக்கல்லில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும் என்று கோர்ட்டு வலியுறுத்தியது. மேலும் விசாரணையில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர், கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 85 ஆயிரமாக குறைக்க போலீசார் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி தலைமையில் நடைபெறும் சிறப்பு அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கோர்ட்டில் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். அதாவது வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். தற்போது கூடுதலாக ½ மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கூறினார். ஏற்கனவே தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ½ மணி நேரம் கூடுதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது 24 மணி நேரத்தில் 18½ மணி நேரம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.